×

நாகை ஒரத்தூரில் அரசு மருத்துவகல்லூரி: மயிலாடுதுறை புறக்கணிக்கப்படுகிறதா?

நாகை: தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகள், ஒரு பல் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஆண்டுக்கு 3,500 பேர் வரை படிக்க சேர்கின்றனர். இந்நிலையில் நம் நாட்டில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப போதுமான டாக்டர்கள் இல்லை.  இதனால் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி  தொடங்கப்படும் என முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி அறிவித்து திமுக ஆட்சி காலத்தில் பல மாவட்டங்களில்  அரசு மருத்துவ கல்லூரிகள்  தொடங்கப்பட்டன. அதன் பிறகு வந்த  எடப்பாடி பழனிசாமி அரசும்  மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் நாடு முழுவதும் வரும் 2020-21ம் கல்வியாண்டில்  புதிதாக மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அக்டோபர் 23ம் தேதி தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து மருத்துவக்கல்விக்கான மத்திய அரசின் செயலாளர் தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். 6 மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் புதிய மருத்துவக்கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கலாம் என்று கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே செயல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனைகளுடன் இணைவு பெற்று புதிதாக தொடங்கப்பட உள்ள 3 மருத்துவ கல்லூரிகளும் செயல்படும். இதன்படி ரூ.325 கோடி செலவில் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் நிதி 60 சதவீதம் (ரூ.195 கோடி) வழங்கும், மாநில அரசு 40 சதவீதம் (ரூ.130 கோடி) வழங்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிக்கும் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைகும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 9 மருத்துவக்கல்லூரிகள் அமையும்பட்சத்தில் இளநிலை 1000 இடங்கள், அடுத்த சில ஆண்டுகளில் 1,500 இடங்கள் வரை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மூன்று புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். நாகை  எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியும் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரத்தூர்: நாகையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தூர் என்ற கிராமத்தில் உள்ள 87 ஏக்கர் காலி நிலத்தில் நாகை மருத்துவ கல்லூரி அமைய உள்ளது.  நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில்  ஏறுசாலை பிரிவில் ஒரத்தூர் உள்ளது. வேளாங்கண்ணியில் இருந்தும் 7கி.மீ. தொலைவில் ஒரத்தூர் உள்ளது. 60 ஏக்கர் நிலத்தில் மருத்துவ கல்லூரி, மாணவ மாணவிகள் விடுதி அமைய உள்ளது.20 ஏக்கர் நிலம் எதிர்கால விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ளப்படும். திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதற்கு முன் இந்த இடத்தை மத்திய பல்கலைக்கழகத்திற்காக பார்வையிட்டனர். பின்னர் பல்கலைக்கழகம் திருவாரூரில் அமைந்து விட்டது. எதிர்கால நலன் கருதி  7 கி.மீ. தொலைவில் மருத்துவ கல்லூரியை அமைத்துள்ளதால் வரும் காலத்தில்  இந்த பகுதிகளும் நன்கு வளர்ச்சி பெறும் எனமக்கள் தெரிவித்தனர். 2 ஆண்டுகளில் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு அதன் பிறகு இங்கு மாணவர் சேர்க்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தில் வர்த்தகம் நிறைந்த பகுதி மயிலாடுதுறை, இங்குள்ள தலைமை மருத்துவமனைக்கு தான் அதிக நோயாளிகள் வருகிறார்கள். நாகை, வேதாரண்யம், திருக்குவளை தாலுகாக்களை விட மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி தாலுகாக்களில் தான் அதிக மக்கள் தொகை உள்ளது. எனவே மயிலாடுதுறையில் தான் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்காக பலர் நிலம் தருவதாக வாக்குறுதியும் அளித்த நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் அழுத்தத்தால் நாகைக்கு மருத்துவ கல்லூரி வந்து விட்டதாக மயிலாடுதுறை மக்கள் மனக்குறையுடன் உள்ளனர். இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு கழக தலைவர் டாக்டர் ராமசேயோன் கூறும்போது, ‘‘அரசின் திட்டங்கள் எல்லாம் நாகைக்கு தான் செல்கிறது. மயிலாடுதுறை பகுதி புறக்கணிக்கப்படுகிறது’’ என்று கூறிஉள்ளார்.  மயிலாடுதுறை விரைவில் மாவட்டமாகும். அப்போது  மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற அடிப்படையில் இங்கும் மருத்துவ கல்லூரி வந்து விடும் என மயிலாடுதுறை மக்களுக்கு ஆறுதல் கூறப்பட்டுள்ளது.


பெரம்பலூர் மருத்துவ கல்லூரி என்னாச்சு?

பெரம்பலூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக திமுக ஆட்சியில்  கடந்த 3.2.2009ல்  அரசாணை வெளியிடப்பட்டது.இதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா சுமார் 30 ஏக்கர் நிலம் கொடுத்தார். அதைத்தொடர்ந்து தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு 4.2.2010ல் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நட்டினார். கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆட்சி மாறியதும் கட்டுமான பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஆனால் பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரி டீன் பணியிடம் ஒதுக்கப்பட்டு இன்றும்அது நடைமுறையில் உள்ளது. தற்போது வசந்தி என்பவர் டீனாக உள்ளார். டீன் அலுவலகம் பெரம்பலூர்  கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டது. தற்போது அந்த அலுவலகம் 3 ரோடு அருகே மாற்றப்பட்டு பூட்டியே கிடக்கிறது. மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரி தொடங்கும் அரசு பெரம்பலூரையும் கவனிக்க வேண்டும் என்பது  பெரம்பலூர் மக்களின் கோரிக்கை.

Tags : Government Medical College ,Mayiladuthurai ,Nagarai Ottur , Nagai, Government Medical College, Mayiladuthurai
× RELATED நெல்லையில் உள்ள உணவகத்தில்...